Published : 27 Oct 2020 11:53 AM
Last Updated : 27 Oct 2020 11:53 AM

கட்டணம் செலுத்த தவறியோர் வீடுகளில் தகவல் தெரிவிக்காமல் மின் இணைப்பு துண்டிப்பு

கோப்புப்படம்

மதுரை

மதுரையில் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில் பயனீட்டாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மின் கட்டணத்தைக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.

இதனால் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. கரோனா ஊரடங்கு தளர்வான நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மின் வாரியம் நிறுத்தியது. இருப்பினும் பலர் இன்னமும் கால அவகாசம் இருப் பதாக நினைத்து மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். அந்த வீடுகளில் தகவல் தெரிவிக்காமல் மின் இணைப்புத் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த வாரம் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் ஒரே நேரத்தில் பல வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு குடியிருப்போர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும் மின் இணைப்பு வழங்கவில்லை. இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது: கரோனா காலத்தில் நாங்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறோம். இதை மனதில் வைத்தே மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் பலரும் மின் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கட்டணம் செலுத்தாதோருக்கு மின் இணைப்பைத் துண்டிப்பதற்கு முன் அந்தப் பயனீட்டாளருக்கு மின்வாரியம் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். கட்டணம் செலுத்தவில்லை என்பதை நினைவூட்ட வேண்டும். இதனால் அவர்கள் கடைசி நேரத்தில்கூட மின் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது. மதுரையில் பெரும்பாலான பகுதிகளில் மின் பயனீட்டாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது நுகர்வோர் சட்டத்துக்கு எதிரானது. எனவே மின் இணைப்பைத் துண்டிப்பதற்கு முன் பயனீட்டாளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும், என்று கூறினர்.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மின் கட்டணம் மற்றும் செலுத்த வேண்டிய தேதி குறித்து பயனீட்டாளர்களின் செல்போன் எண்ணுக்கும், மின்னஞ்சல் முக வரிக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப் படையில் மின் கட்டணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி இணைப்பு துண்டிப்பு மற்றும் அபராதத்தைப் பயனீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x