

மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் திடீரென மாற்றப் பட்டுள்ளது பல்வேறு துறை அதி காரிகள், விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் தேர்தல், கிரானைட் குவாரியைத் திறக்கும் முயற்சி இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாவட்ட ஆட்சியராக டி.ஜி.வினய் 2019 அக்.14-ல் பொறுப்பேற்றார். ஓராண்டில் மாற்றப்பட்டு சேலம் மாவட்டப் பட்டுப்புழு வளர்ப்புத்துறை இயக் குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடன் மாற்றப்பட்ட மற்ற மாவட்ட ஆட்சியர்கள், வேறு மாவட்டங்களில் அதே பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வினய்க்கு முக்கியத்துவம் இல்லாத பணியிடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றிய நிலையில், அவரின் திடீர் மாற்றம் பல்வேறு அரசுத்துறையினர், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரம், வருவாய், வேளாண் துறை அலுவலர்கள், விவசாயச் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தென் மாவட்ட நுழைவு வாயிலான மதுரைக்கு, தினமும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் கரோனா பரவல் அதிகம் இருக்கும். இதைச் சவாலாக ஏற்று கட்டுப்படுத்தியதில் வினய் அர்ப்பணிப்போடு பணியாற்றினார். கரோனா வார்டுக்குள் பல முறை சென்று ஆய்வு செய்தார். தனக்கு ஒவ்வாமை நோய் தாக்குதல் ஏற்பட்டும், குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பிவிட்டு கரோனா தடுப்பில் கவனம் செலுத்தினார். நீர்நிலைகளைத் தூர்வாரவும், மழைநீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு, பாசன நீரை கண்மாய்களில் சேமிக்க தனிக் கவனம் செலுத்தினார். மதுரையில் 2 அமைச்சர்கள் போட்டி போட்டு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பாரபட்சம் காட்டாமல் பங்கேற்றார்.
இந்நிலையில், அவரைத் திடீரென மாற்றியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினருக்கு ஒத்துழைப்பு அளித்தாலும், சட்ட விதிகளை மீறி எந்த செயலுக்கும் ஆட்சியர் அனுமதிக்க மாட்டார். இதனால் இவர் பொறுப்பில் இருந்தால், பொதுத் தேர்தலை சுலபமாகச் சந்திக்க முடியாது என ஆளும்கட்சியினர் நினைத்திருப்பர்.
அத்துடன், உயர் நீதிமன்றம் பிறப்பித்த கடுமையான உத்தர வுகளால் மணல் உள்ளிட்ட கனிம வளத்தை எடுக்க ஆட்சியர் அனுமதிக்கவில்லை. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன. மதுரையில் மட்டும் வழக்குகள் இருப்பதால் செயல்படவில்லை.
இதைச் செயல்படுத்த சட்ட ரீதியிலான முயற்சிகள் தற்போது தொடங்கி உள்ளன. இதற்கு ஆட்சியர் ஒத்துழைக்க மாட்டார் என பின்னணியில் உள்ளவர்கள் நம்புகின்றனர். இதனாலும் அவர் மாற்றப்பட்டிருக்கலாம். இடமாறுதலை அவரே கோராத நிலையில், முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு அவரை மாற்றியுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.