

ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் முக்கிய நிலையமாகத் திகழ்கிறது ஆவடி ரயில் நிலையம். இங்கு மத்திய அரசின் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை, விமானப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் உள்ளன.
இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு பணிபுரிகின்றனர்.
இதைத் தவிர ஆவடியைச் சுற்றி ஏராளமான பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரயில் மூலம் ஆவடிக்கு வருகின்றனர்.
ஆவடி ரயில் நிலையம் சென்னை-திருப்பதி நெடுஞ் சாலைக்கும், புதிய ராணுவ சாலைக்கும் இடையில் அமைந்
துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் குறுக்கே கடந்து செல்வதற்காக ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆவடி நேரு பஜார் சாலையின் குறுக்கே இந்த ரயில்வே கேட் அமைந் துள்ளது. இதனால், அச்சாலையில் எப்போதும் கூட்ட நெரிசல் உள்ளது. பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிர்ச் சேதம் ஏற்படுகிறது.
இதைத் தடுக்க அங்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று அங்கு சுரங்கப் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், அதன் பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.
இதுகுறித்து, ஆவடியில் உள்ள ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஆவடி ரயில் நிலையம் வழியாக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து ஆவடி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர் ஆகிய ஊர்களுக்கு நாள் ஒன்றுக்கு 175 புறநகர் மின்சார ரயில்கள் செல்கின்றன. அத்துடன், ஏராளமான எக்ஸ்பிரஸ், மெயில் மற்றும் சரக்கு ரயில்கள் செல்கின்றன.
இதனால், அடிக்கடி கேட் மூடப்படுகிறது. அந்த சமயங்களில் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் மிகவும் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். இதனால், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்துக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் ரயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், காலை, மாலை வேளைகள் மட்டுமின்றி எந்நேரமும் கூட்ட நெரிசல் உள்ளது. சில நேரங்களில் ரயில்வே கேட்டை கூட மூட முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி இங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம் இதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.