

திருநாவலூரில் கெடிலம் ஆற்றில் வருவாய்த் துறையினர் துணையோடு மணல் கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உளுந்தூர்பேட்டை வட்டத் திற்குட்பட்ட திருநாவலூர் வழியாக செல்லும் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளியதாக திருநாவலூர் போலீஸார் இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சுமார் 60 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவோரை ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கும் போலீஸார், லாரிகளில் மணல் அள்ளுவோரை பிடிக்காதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
லாரிகளில் மணல் அள்ளு வோருக்கு அப்பகுதியைச் சேர்ந்த வருவாய்த் துறையினரும் துணை புரிகின்றனர். புகார் அளித்தால் வருவாய்த் துறையினர் அதன்மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. இச்சூழலில், திருநாவலூர் காவல் ஆய்வாளர் விஜி பணியிட மாற்றம் செய்யப்பட்டு சீனுவாசன் என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அண்மையில் கெடிலம் ஆற்றில் 4 லாரிகளில் மணல் அள்ளும்போது அப்பகுதி மக்கள் லாரிகளை மடக்கி பிடித்தனர். அப்போது, வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று லாரிகளை விடுவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் காதர் அலியிடம் விசாரித்தபோது, "வருவாய்த் துறையினர் யாரும் மணல் அள்ள துணை புரிவது கிடையாது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டப் பயனாளிகள் சிலருக்கு மணல் அள்ள அனுமதித்திருப்பர். மற்றபடி மணல் அள்ள யாருக்கும் அனுமதி கிடையாது" என தெரிவித்தார்.