பொன்பத்தி ஏரியில் குவியும் பறவைகள்

பொன்பத்தி ஏரியில் குவிந்துள்ள பறவைகள்.
பொன்பத்தி ஏரியில் குவிந்துள்ள பறவைகள்.
Updated on
1 min read

செஞ்சி - விழுப்புரம் சாலையில் உள்ள பொன்பத்தி ஏரியின் மையத்தில் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த ஏரிக்கு திடீரென ஏராளமான பறவைகள் வரத் தொடங்கின. நாளடைவில் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

கொக்கு, நாரை, மைனா, மீன் கொத்தி, பலவகையான குருவிகள் என 15க்கும் மேற்பட்ட பறவை இனங்களை இங்கு காணமுடிகிறது. சில வகை பறவைகள்இந்த பகுதியில் இதற்கு முன்புஇப்பகுதியில் பார்க்காத பறவையினங்களாக உள்ளன. சற்று பெரிய அளவிலான பறவையினங்களும் தென்படுகின்றன. ஏரியின் மையத்தில் உள்ள மரங்கள் பறவைகள் தங்க வாய்ப்பாக உள்ளன. ஏரி மீன்களை உண்டு பறவைகள் வலம் வந்து மகிழ்கின்றன.

நாள்தோறும் காலை 5 மணியில் இருந்து இரைதேடிச் செல்லும் இப்பறவைகள், மாலை 7 மணிக்குள் மீண்டும் ஏரியில் உள்ள மரங்களுக்கு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் பொதுவாக தமிழகத்திற்குள் அக் டோபர் மாதம் வருவது வழக்கம்.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மரக்காணம் அருகே கழுவெளி ஏரியில் இப்படி பறவைகள் வருவது உண்டு. அது போல தற்போது பொன்பத்தி ஏரியிலும் பறவைகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

சிலர் இந்த அரிய பறவை களை வேட்டையாடவும் தொடங்கி யிருக்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலக வட்டாரங்களில் கேட்ட போது, “செஞ்சி பகுதியில் பறவைகளை வேட்டையாடியதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தொடர்ந்து 6 மாதம் நீர் தேங்கும் நீர் நிலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. செஞ்சி பகுதியில் வளத்தி, பொன்பத்தி ஏரிகள் அந்த கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ளன. பொன்பத்தி ஏரியில் வந்து தங்கும் பறவைகளை யாரும் வேட்டையாட முடியாத வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடுவோர் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in