Published : 27 Oct 2020 10:41 AM
Last Updated : 27 Oct 2020 10:41 AM

திருமாவளவனைக் கண்டித்து அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி; முட்டுக்காடு அருகே குஷ்பு கைது; வன்முறைக்கு அடங்க மாட்டோம் என ட்வீட்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சிதம்பரம் செல்ல முயன்ற குஷ்புவை முட்டுக்காடு அருகே போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் மனுநூல் பெண்களை இழிவு செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். இதனால், திருமாவளவனைக் கண்டித்து பாஜகவினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோன்று, பாஜகவினரைக் கண்டித்து விசிகவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் பாஜகவினர் குஷ்பு தலைமையில் இன்று (அக். 27) காலை ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை நேற்றே அனுமதி மறுத்திருந்தது. அதே நேரத்தில், பாஜகவினர் போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் பாஜகவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியும் போராட்டம் நடத்தும் என விசிக அறிவித்திருந்தது.

இதனால், சிதம்பரத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், சிதம்பரத்தில் எவ்விதப் போராட்டங்களுக்கும் அனுமதியில்லை எனக் காவல்துறை அறிவித்தது. அனுமதியை மீறி இன்று பாஜகவும், விசிகவும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டன. இதனால் கடலூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலையில் சென்னையில் இருந்து சிதம்பரத்துக்குப் புறப்பட்டார் குஷ்பு. அவரை மாவட்ட எல்லையிலேயே கைது செய்யக் காவல்துறை திட்டமிட்டதாகத் தெரிகிறது. அதன்படி, சென்னையிலிருந்து கிளம்பிய குஷ்புவை முட்டுக்காடு அருகே காவல்துறை கைது செய்தது.

அதேசமயத்தில், சிதம்பரத்தில் விசிகவினர் போராட்டம் நடத்த வந்தபோது, விசிக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரும் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிறகு குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில், "கைது செய்யப்பட்டுள்ளோம். பெண்களின் மாண்புக்காக கடைசி மூச்சு வரை போராடுவோம். பெண்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி எப்போதும் பேசியுள்ளார். அவரது வழியில் நாங்கள் செல்வோம். வன்முறைக்கு அடங்க மாட்டோம். பாரத் மாதா கி ஜெய்.

விசிகவினர் கோழைகள். மகிழ்ச்சியடைய வேண்டாம். இது உங்கள் தோல்வி. கைது செய்யப்பட்ட நாங்கள் பலமானவர்கள் என அவர்களுக்குத் தெரியும். நாங்கள் தலைவணங்க மாட்டோம். இந்த மண்ணின் ஒவ்வொரு மகளின் மரியாதைக்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். விசிகவினருக்குப் பெண்களை மதிப்பதென்பது அந்நியமான செயலாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x