

கரோனாவால் மூடப்பட்ட புதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இங்கு இயங்கிய காய்கறி கடைகள் முழுவதும் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டன.
கரோனா பரவல் காரணமாக புதுவையில் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 31ம் தேதி முதல் பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் அனைத்தும் புதுவை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன.
தமிழக பேருந்துகளுக்கு அனுமதி எப்போது?
புதுவை புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் பேருந்துகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திண்டிவனம், கடலூர், சென்னை, மரக்காணம் மற்றும் விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேருந்து நிலையப் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது. புதுவை நகருக்குள் இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படும் கிழக்குப் பகுதி பயணிகள் நடமாட்டத்துடன் காணப்பட்டது.
தமிழக பேருந்துகள் எப்போது இயங்கும் என்று அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஊரடங்கு தளர்வு காரணமாக பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகள் இயங்குவதால் மறைமலை அடிகள் சாலையில் பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலைய நிரந்தர கடை உரிமையாளர்கள், காய்கறி கடை உரிமையாளர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதில் காய்கறி கடைகளை பழையபடி நேரு வீதி பெரிய மார்க்கெட்டில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளுக்கான மேற்கூரைகள் அகற்றப்பட்டன.
பெரிய மார்க்கெட்டில் நேற்று முதல் அனைத்து காய்கறி கடைகளும் வழக்கம்போல இயங்க தொடங்கியது. பேருந்து நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற மூட்டைகள் அனைத்தும் பெரியமார்க்கெட் கொண்டு செல்லப்பட்டது. பேருந்து நிலையத்தில் நிரந்தர கடை வைத்திருப்போர் தங்கள் கடைகளை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர். இன்று முதல் பேருந்து நிலையத்தில் அனைத்து கடைகளும் முழுவீச்சில் இயங்க தயாராகி வருகிறது.