

நரம்பியல் மற்றும் மூட்டுவலியால் அவதிப்பட்ட பேரறிவாளன் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை மேற்கொள் வதற்காக அவரது தாயார் அற்புதம்மாள் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதன்பேரில், பேரறி வாளனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி புழல் சிறையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார். அவரை, உறவினர்கள் தவிர மற்றவர்கள், குறிப்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் வீட்டை சுற்றிலும் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனை
இந்நிலையில், பேரறிவாளன் கடந்த சில நாட்களாக நரம்பியல் மற்றும் மூட்டு வலியால் அவதிப் பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கிருஷ்ணிகிரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்க நேற்று முன்தினம் காலை 8.45 மணிக்கு காவல் துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிறகு, மாலை 4 மணிக்கு அவர் வீடு திரும்பினார்.