

மோர்தானா அணையில் இருந்து கவுன்டன்யா ஆற்றில் வெளியேறும் உபரி நீரின் அளவு 450 கன அடியாக குறைந்ததால் ஜிட்டப்பள்ளி பிக்-அப் அணையில் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆந்திர மாநிலத்தையொட்டி அமைந்துள்ள கவுன்டன்யா வனப்பகுதியாக உள்ளது. அங்கு பெய்து வரும் தொடர் மழையால் 11.5 மீட்டர் உயரமுள்ள அணை கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து தினசரி சுமார் 60 கன அடி வீதம் உபரிநீர் வெளியேறி வந்தது.
இதற்கிடையில், தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மோர் தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன் பாலாறு, பொன்னை ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. பொன்னையாற்றில் சுமார் 4 ஆயிரம் கன அடியும், மோர் தானா அணைக்கு சுமார் 1,000 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது. மோர்தானா அணை ஏற்கெனவே நிரம்பி இருந்ததால் நீர்வரத்து முழுவதும் அப்படியே கவுன்டன்யா ஆற்றில் வெள்ளமாக வழிந்தோடியது.
திடீர் வெள்ளப் பெருக்கால் கவுன்டன்யா மற்றும் பொன்னை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழைக்கு முன்பாக முக்கிய ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை காண ஏராளமானவர்கள் மோர்தானா அணைக்கும், பொன்னை அணைக்கட்டு பகுதியிலும் குவிந்தனர். அதிக கூட்டத்தால் மறு உத்தரவு வரும்வரை மோர்தானா அணையை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கவுன்டன்யா ஆற்றில் கடந்த 4 நாட்களாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் குடியாத்தம் தரைப்பாலத்தை சனிக்கிழமை இரவு கடந்தது. வெள்ளத்தை மக்கள் மலர் தூவியும் பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். ஆற்றுப் பகுதியில் குடும்பம் குடும்பமாகச் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
ஜிட்டப்பள்ளியில் கூட்டம்
மோர்தானா அணைப் பகுதியில் பொதுமக்கள் பார்வையிடவும் ஆற்றுப் பகுதியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானவர்கள் குடியாத்தம் அருகேயுள்ள ஜிட்டப்பள்ளி பிக்-அப் அணை பகுதியில் குவிந்து வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 450 கன அடி வீதம் வெள்ள நீர் வெளியேறியது.
நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானவர்கள் ஜிட்டப்பள்ளி ஆற்றில் குவிந்து உற்சாகமாக நீச்சலடித்து வருகின்றனர். அங்கு வரும் நாட்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.