

ஈரோடு அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திருமாவளவனுக்கு, பாஜக - இந்து முன்னணியினர் கருப்புக் கொடி காட்டினர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக பாஜகவினர் போலீஸில் புகார்அளித்துள்ளனர். மேலும், பல்வேறுஇடங்களில் திருமாவளவனைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, தனது நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று வந்தார். இந்த தகவல்பரவியதால், சித்தோடு பாலம் அருகே, பாஜக, இந்து முன்னணியினர் கருப்புக்கொடியுடன் திரண்டனர். போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருமாவளவன் கார் அப்பகுதியைக் கடந்தபோது, பாஜக மற்றும் இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி, கருப்புக்கொடி காட்டினர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். திருமாவளவன் கார் சென்ற பின்பு, அப்பகுதியில் திரண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் இரு வாகனங்கள் சேதமடைந்தன. இரு தரப்பினரையும் போலீஸார் கைது செய்தனர்.