தாம்பரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அறநிலைய துறை இடத்துக்கு சட்டவிரோத மின் இணைப்பு: உடனடி நடவடிக்கைக்கு பக்தர்கள் கோரிக்கை

தாம்பரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அறநிலைய துறை இடத்துக்கு சட்டவிரோத மின் இணைப்பு: உடனடி நடவடிக்கைக்கு பக்தர்கள் கோரிக்கை
Updated on
1 min read

தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் அறநிலையத் துறை நிலங்களில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு, மின் வாரியம் சட்டவிரோத மின் இணைப்பு வழங்கி உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

தாம்பரம் அடுத்த, மாடம்பாக்கத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு மாடம்பாக்கம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில், பல ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றில் வீடு, கடை கட்டியோரில் சிலர் மட்டுமே, கோயில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்தி, அத்துறையின் சான்றிதழ் பெற்று, மின் இணைப்பு பெற்றனர்.

சிலர் வாடகை செலுத்தாமல், சட்டவிரோதமாக வருவாய் துறையிடம் சான்றிதழ் பெற்று, மின் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும் அதை மற்றவர்களுக்கு விற்கவும் செய்கின்றனர். இதனால், கோயில் நிலங்கள் பறிபோவதோடு, நிர்வாகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோயில் நிலங்களை மீட்க, அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசு கவனத்துக்கு..

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: இந்து சமயஅறநிலையத் துறைக்கு தெரியாமல் கோயில் நிலங்களில் வீடு கட்டியுள்ளோருக்கு, மின் இணைப்பு வழங்கக் கூடாது என, மின் வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதை பொருட்படுத்தாமல், மின் வாரியம் இணைப்பு வழங்குகிறது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று மின்வாரிய அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

இதுகுறித்து தாம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜன் கூறியதாவது: புறம்போக்கு நிலம் மற்றும் கோயில் நிலங்களில் மின் இணைப்பு வழங்க துறை அலுவலரிடம் தடையில்லா சான்று பெற்றுதான் இணைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகளை மீறி இணைப்பு வழங்கப்பட்டிருந்தால் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in