

நவராத்திரியில் முப்பெருந்தேவியரின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் 10-வது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் சிறந்த வெற்றியளிக்கும் என்பது நம்பிக்கை. எனவே, விஜயதசமியன்று பெற்றோர் தங்களது குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்து கல்வியைத் தொடங்க வைப்பது வழக்கம்.
இதன்படி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கோயிலுக்கு வந்தனர். முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். பெற்றோர் தங்களது குழந்தைகளை மடியில் அமர வைத்து தாம்பூல தட்டில் நிரப்பப்பட்டிருந்த நெல்மணிகளில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுத வைத்தனர்.
பின்னர் ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர். கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மகாலிங்கபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில்களில் நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.