Published : 27 Oct 2020 06:39 AM
Last Updated : 27 Oct 2020 06:39 AM

மருத்துவம் என்பது நுண்கலை; வணிகம் அல்ல; மக்களிடம் வித்தியாசம் காட்டாத இறைவனை போல் நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டும்: மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

இறைவன் மக்களிடம் வித்தியாசம் பார்ப்பதில்லை. அதுபோல்,மருத்துவர்களும் நாடி வரும் நோயாளிகளிடம் வித்தியாசம் பார்க்காமல் சேவையாற்ற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

சென்னை, வடபழனியில் போர்ட்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் புதிய மருத்துவமனையை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன மருத்துவமனை அடையாறில் இயங்கி வரும் நிலையில், தற்போது வடபழனியில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட புதிய மருத்துவமனையை தொடங்கியிருப்பது, தமிழகம் நாட்டின் மருத்துவ தலைநகரம் என அழைக்கப்படுவதை உறுதி செய்வதாக உள்ளது. தமிழக அரசு அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதால்தான், நாட்டிலேயே மருத்துவத் துறையில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

குறிப்பாக, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தைகள் நலப்பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் உள்ளிட்ட பல முன்னோடி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் தகுதியான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 2 பேறுகாலம் வரை ரூ.18 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுவதால், நாட்டிலேயே அதிகளவாக 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. குழந்தைகள் இறப்பு விகிதத்தில், வரும் 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை இப்போதே அடைந்து விட்டோம்.

முன்மாதிரியாக திகழ்கிறது

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் 5 ஆண்டுகளாக தேசிய அளவில் மிகச்சிறந்த மாநில விருதை பெற்று வருகிறது. மருத்துவ சேவை மட்டுமின்றி, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெற, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழகத்துக்கு வருவதால், நாட்டின் மருத்துவ சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

மருத்துவம் என்பது நுண்கலை; வணிகம் கிடையாது. இதை அடிப்படையாகக் கொண்டு, நாடி வரும்அனைத்து தரப்பு மக்களிடமும்அன்புடன் பழகி, அவர்களுக்குஉயரிய மருத்துவ சேவையை வழங்க வேண்டும். இறைவன் மக்களிடம் வித்தியாசம் பார்க்காமல், அவர்கள் குறையை தீர்ப்பது போல் நோயாளிகளிடம் வித்தியாசம் பார்க்காமல் மருத்துவர்கள்மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், போர்டிஸ் ஹெல்த்கேர் தலைவர் ரவி ராஜகோபால், தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் அசுதோஷ் ரகுவன்ஷி, ஐஎச்எச் ஹெல்த்கேர் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் கெல்வின் லோ உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த மருத்துவமனையில் 75 படுக்கை வசதியுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு, 6 அறுவை சிகிச்சை அரங்கங்கள், 3 சிறிய அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய அவசர மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு மற்றும் கேத் லேப் உள்ளிட்ட பல்வேறு உலகத்தர வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x