

தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெங்குவுக்கான அறிகுறிகளுடன் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் தின் உத்தரவின் பேரில், முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் டெங்குவை தடுக்க தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தாம்பரம் நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயத்தை வழங்கி, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்துறைக்கு, பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மொத்தம் 36 பள்ளிகளில் உள்ள 37,250 மாணவர்களுக்கு முதல் தவணை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களாக தாம்பரம் ரயில் நிலையம், பஸ் நிலையம், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்காக்கள் என 15 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளிலும் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4850 பேருக்கு வழங்கியிருக்கிறோம் என்றார் அவர்.