

நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைபட்டிருக்கும் விசாரணைக் கைதிகளில் 58% பேர் தமிழக சிறைகளில்தான் இருக்கின்றனர் என்ற கவலை தரும் புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது.
தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் (National Crime Records Bureau- NCRB) கடந்த சனிக்கிழமையன்று இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது.
அதனடிப்படையில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாட்டில் பல்வேறு சிறைகளிலும் அடைபட்டிருக்கும் மொத்தமுள்ள 3,237 விசாரணைக் கைதிகளில் 1,892 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர் பெண்கள்.
2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்த விசாரணைக் கைதிகள் எண்ணிக்கை 1781. இதைவிட 2014-ம் ஆண்டில் விசாரணைக் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிறையில் விசாரணைக் கைதிகளாக வாடும் 1,892 பேரில் 53% சதவீதத்தினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 1892 பேரில் 886 பேர் கல்வியறிவு பெறாதவர்கள். தமிழக சிறைச்சாலைகளில் உள்ள மொத்த கைதிகளில் 11.9% பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவர்கள். இது நாட்டிலேயே மிக அதிகம் என அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
தமிழகத்தை அடுத்து குஜராத் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 594 விசாரணைக் கைதிகள் உள்ளனர்.
தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தனது புள்ளிவிவரத்தில் தமிழக சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகாள் எத்தனை பேர் எந்தெந்த தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலை குறிப்பிடவில்லை. ஆனால், தமிழக சிறைத்துறை புள்ளிவிவரம் அடிப்படையில் பார்க்கும்போது பெரும்பாலானோர் குண்டர் சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
வேதனை அளிக்கும் போக்கு:
தமிழகம் விசாரணைக் கைதிகள் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக பொதுச் செயலாளர் வி.சுரேஷ் கூறும்போது, "தேசிய குற்றவியல் ஆவண வாரியத்தின் புள்ளிவிவரம் வேதனை அளிக்கிறது.
தடுப்புக் காவல் சட்டங்களால் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. குறிப்பாக தலித்துகள் இத்தகைய சட்டங்களால் பாதிக்கப்படுவதை நாங்கள் நேரடியாக பல முறை பார்த்திருக்கிறோம்" என்றார்.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறும்போது, "ஜாமீனில் வெளிவர முடியாது என்ற ஒரே வசதியை பயன்படுத்திக்கொண்டு போலீஸார் சிலர் இத்தகைய சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இத்தகைய சட்டங்கள் மூலம் கைதானால் குறைந்தபட்சம் ஓராண்டாவது சிறையில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
தடுப்புக் காவல் சட்டங்களை அதிக அளவில் பயன்படுத்து காவல் ஆய்வாளர்களுக்கு சுழற் கோப்பை வழங்கும் நடைமுறைகூட போலீஸ் வட்டாரத்தில் இருக்கிறது. தடுப்புக் காவல் மூலம் கைதானவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆலோசனை வாரியங்களும் இவற்றை மெத்தனமாகவே கையாள்கின்றன. இதன் காரணமாகவே இத்தகைய வாரியங்களுக்கு தலைமை வகிப்பதை நான் தவிர்த்து வந்தேன்" என்றார்.
மோசமான வரைவு
”எனது அனுபவத்தில் தடுப்புக் காவல் உத்தரவுகள் மிக மோசமாக வடிவமைக்கப்படுகின்றன என்றே சொல்வேன். வெவ்வேறு பகுதிகளில் நடந்த வெவ்வேறு குற்றச்செயல்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவுகள் நகல் எடுத்தது போல் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்திருக்கிறேன்” எனக் கூறினார் நீதிபதி சந்துரு.
அதேபோல் மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்ரி டிபானி கூறும்போது, "இந்த புள்ளிவிவரம் தமிழகத்தில் சிவில் உரிமைகளைப் பேணுவதில் தமிழக அரசு எந்த நிலையில் இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை அத்துமீறும் வகையில் தடுப்புக் காவல் சட்டங்கள் இருப்பதால் அவற்றை தவிர்க்க முடியாத சூழலிலேயே பயன்படுத்த வேண்டும். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் புள்ளிவிவரம் தடுப்புக் காவல் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதையே உணர்த்துகிறது" என்றார்.