Published : 26 Oct 2020 07:59 PM
Last Updated : 26 Oct 2020 07:59 PM

என்றும் மவுசு குறையாத சின்னாளபட்டி சுங்குடி சேலைகள்: இளைய தலைமுறையினரையும் கவரும் டிசைன்களால் தொழில் வளர்ச்சி  

திண்டுக்கல் 

சின்னாளபட்டியில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் இளையதலைமுறையினரையும் கவரும் வண்ணம் பல்வேறு டிசைன்களில் தயாரிக்கப்படுவதால் கல்லூரி மாணவிகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி அணியும் உடையாக சுங்குடி சேலைகள் உள்ளது.

இதனால் இந்தத் தொழில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி சிறந்த முறையில் நடந்துவருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பாரம்பரியமிக்க சுங்குடிழ் சேலைகள் தயாரிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தொழிலில் சின்னாளபட்டி பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் உற்பத்தியாளர்களாக உள்ளனர்.

இவர்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற சுங்குடி சேலைகள்:

சின்னாளபட்டியில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் உலகப் பிரசித்திபெற்றது. நம் முன்னோர்கள் உடுத்திய 16 கஜம் புடவை முதல் இந்த காலத்து இளையதலைமுறை பெண்கள் உடுத்தும் வகையில் சுங்குடி சேலைகள், காட்டன் சேலைகள் உள்ளிட்டவை இங்கு தயாரிக்கப்படுகிறது.

சுங்குடி சேலை தயாரிக்க துணிகளை பண்டல்களாக மொத்தமாக திருப்பூர், கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள மில்களில் வாங்குகின்றனர். இதை சேலையின் நீளத்தை பொறுத்து துண்டித்து முதலில் சாயம் ஏற்றும் பணியை செய்கின்றனர்.

இதையடுத்து அதில் பலவிதமான டிசைன்களை கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கின்றனர். இந்த டிசைன்களை ஸ்கிரீன் பிரிண்டிங் மூலம் சேலைகளில் பிரிண்ட் செய்கின்றனர். பின்னர் சேலைகளை திறந்தவெளியில் உலர்த்தி அயர்ன் செய்து, பேக்கிங் செய்து சேலையை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

சுங்குடி சேலைகளில் சிங்கிள், டபுள்கலர், முடிச்சு, கல்கட்டா, கைபுட்டா என பல்வேறு வகைகளில் மக்கள் விரும்பும் வண்ணத்தில் தயாரிக்கின்றனர்.

சுங்குடி சேலை தயாரிப்பில் கைத்தறியில் சேலை தயாரிப்பது முதல் சாயம் ஏற்றுவது, பிரிண்டிங் செய்வது என அனைத்துமே மனித உழைப்பால் நடைபெறுகிறது. இயந்திரங்கள் பயன்பாடு இல்லை என்பதால் சேலை தயாரிப்பது, சாயம் ஏற்றும் பிரிவு, பிரிண்டிங் பிரிவு, அயர்னிங் பிரிவு, சேலைகளை விற்பனைக்கு அனுப்ப பேக்கிங் பிரிவு என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்ததொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். சின்னாளபட்டி பகுதி மக்கள் பெரும்பாலோனோரின் வாழ்வாதாரமே சுங்குடி சேலை தயாரிப்பு தொழிலை மையமாககொண்டே உள்ளது.

வெளிநாடுகள் செல்லும் சுங்குடி சேலைகள்:

சின்னாளபட்டியில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இதுகுறித்து சுங்குடி சேலை உற்பத்தியாளர் டி.தம்பித்துரை கூறியதாவது: நவீன உலகில் பெண்களுக்கென பல மாடர்னான உடைகள் வந்தாலும் முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய சுங்குடி சேலைகளுக்கு இன்றும் மவுசு உள்ளது. தற்போதைய காலத்து பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள் சுங்குடி சேலைகளை விரும்பிஅணிகின்றனர்.

இங்கிருந்து மேற்குவங்காளம், கர்நாடகா, மத்தியபிரதேசம், ஒரிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சுங்குடி சேலைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு குழுவினர் மொத்தமாக ஆர்டர் செய்து சிவப்பு நிறத்திலான சுங்குடி சேலைகளை வாங்குகின்றனர். வெளிநாடுகளான இந்தோனேசியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

அங்குள்ள தமிழர்கள் சுங்குடி சேலைகளை விரும்பி அணிகின்றனர் என்பதால் சுங்குடி சேலைகளுக்கு வெளிநாடுகுளிலும் மவுசு தொடர்கிறது. கரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் உற்பத்திய இல்லாதநிலையில் தற்போது கரோனாவில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் உற்பத்தியை தொடக்கியுள்ளோம்.

ஆண்டு முழுவதும் தயாரிப்பு பணி நடைபெறும் அளவிற்கு ஆர்டர்கள் கிடைக்கிறது. இதனால் இந்ததொழிலை நம்பியுள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கிறது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x