Published : 26 Oct 2020 07:21 PM
Last Updated : 26 Oct 2020 07:21 PM

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு; இந்த ஆண்டே வழங்க தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் 

சென்னை

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்பட்ட மருத்துவ இடங்களில் இந்தக் கல்வியாண்டிலேயே இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த, அமல்படுத்தத் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்:

“மதிப்பிற்குரிய பிரதமருக்கு, வணக்கம்.

அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களால் வழங்கப்பட்ட மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

மாநிலங்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இந்தக் கல்வியாண்டில் பயன்பெற முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மையிலேயே கவலையுறச் செய்கிறது.

மேற்படி, இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால், ஆயிரக்கணக்கான மாணவர்கள், மருத்துவத் துறையில் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பினை இழக்கின்றனர். எனவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் மருத்துவக் கனவில் இருப்போர் இந்தக் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

திமுக தொடர்ந்த வழக்கில், அகில இந்தியத் தொகுப்பில் உள்ள இடங்களில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான உரிமையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததுடன், மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நடப்புக் கல்வியாண்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது என்பது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கிறது. அதனால், ஆயிரக்கணக்கான இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவம் பயில விரும்புவோரின் கனவுகள் இந்த ஆண்டு நிறைவேறாது என்பது வருத்தமளிக்கிறது.

குறிப்பாக, முன் எப்பொழுதுமில்லாத பேரிடர் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மாணவர்கள் மருத்துவம் கற்பதற்கும், நாட்டுக்குச் சேவை செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லையெனில் அது நம் நாட்டுக்குக் கற்பனை செய்து பார்த்திட முடியாத அளவிலான இழப்பாகும்.

நமது நாட்டின் அரசியலானது சமூக நீதிக் கொள்கைகளினால் அமைக்கப்பட்டது; எப்பொழுதுமே அரசியல் கட்சிகள் கருத்தியல்ரீதியான வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயலாற்றியிருக்கின்றன.

எனவே, இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை அமல்படுத்திடும் வகையில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் நலனுக்காக, மாநிலங்கள் வழங்கும் இடங்களில் இட ஒதுக்கீட்டைக் கமிட்டி உறுதி செய்திடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x