கன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்: கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்: கே.எஸ்.அழகிரி
Updated on
1 min read

கன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி. இங்கு பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறோம் என கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமார் எம்.பி.யின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்துறையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தமிழக அரசு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதில் கையெழுத்திடுவதற்கு ஆளுநர் சுணக்கம் காட்டாமல் சட்டமாக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எழுதும் வகையில் நீட் தேர்வு அமைய வேண்டும். படிப்பது ஒரு பாடத்திட்டமாகவும், எழுதுவது மற்றொரு பாடத்திட்டமாக இருப்பதால் எதிர்க்கிறோம்.

திருமாவளவன் புராணங்களில் உள்ளதை மறுபதிவு செய்துள்ளார். பெண்களை புராணங்களில் இழிவாக கூறியுள்ளனர். திருமாவளவன் இந்து மதத்திற்கு எதிராகப் பேசவில்லை. அவர் தவறாக எதுவும் கூறவில்லை. அவர் மீது வழக்கு போட எந்தவித முகாந்திரமும் இல்லை.

திருமாவளவனை நாங்கள் ஆதரிக்கிறோம். காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகை குஷ்பு சென்றது அவருக்கு தான் பின்னடைவு. கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸின் தொகுதி. இங்கு பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். அதற்காக தயாராகி வருகிறோம்" என்றார்.

பேட்டியின்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in