

புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆறு ஆண்டுகளில் 3 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதில் ஒருவருக்குக் கூட தண்டனை பெற்றுத் தராதது தொடர்பாக துணைநிலை ஆளுநர், முதல்வரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஒரு வாரம் நடத்தப்பட்டு வந்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கூட பல ஆண்டுகளாக பொது அரங்கில் நடத்த முன்வராமல் சம்பிரதாய விழாவாக புதுச்சேரி அரசு நடத்தி வருகிறது.
புதுச்சேரியில் தற்போது பொதுமக்கள் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. பலரும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையைத் தவிர்த்து சிபிஐ கிளையில் புகார் தரத் தொடங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையைப் பலரும் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 6 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு சம்பந்தமாகப் பெறப்பட்ட புகார் மனுக்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் தண்டனை பெற்றவர்கள் விவரம் குறித்து இந்திய தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கோரியிருந்தார்.
அதில் கிடைத்த தகவல்களை மனுவாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோருக்கு இன்று (அக். 26) அளித்துள்ளார்.
இது தொடர்பாக ரகுபதி கூறியதாவது:
"கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மொத்தம் 146 புகார் மனுக்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் பெறப்பட்டு, 3 புகார் மனுக்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்குக் கூட தண்டனை பெற்றுத் தரவில்லை எனத் தகவல் அளித்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை சம்பிரதாயத்திற்குச் செயல்பட்டு வருவது தெரியவருகிறது.
போலிச் சான்றிதழ் அளித்துப் பணியில் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை விசாரணை முழுமை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை.
இதனால் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையின் மீது நம்பகத்தன்மையை இழந்து இவர்களிடம் புகார் தர விருப்பம் இல்லாமல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தையும், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தையும் நாடுகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்".
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆய்வாளர், காவலர் என 19 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு தகவலின்படி 22 ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.3.06 லட்சம் அலுவலக வாடகைக் கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.