

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் உள் இடஒதுக்கீடு தாமதமாவதற்கு மத்திய அரசின் பொம்மையாக தமிழக அரசு செயல்படுகிறது என குமரியில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் மார்த்தாண்டத்தை அடுத்துள்ள நடைகாவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்.பி.யின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் ஏழை மாணவ, மாணவியர்க்க்கு கல்வி உதவித்தொகையும், ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கே.எஸ்.அழகிரி பேசுகையில்; புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு ஆதாரவிலை கூட கிடைக்காத நிலை ஏற்படும்.
மாநில உரிமைகளை தமிழக அரசு விட்டுக் கொடுத்து வருகிறது. பாரதிய ஜனதா ஆட்சியில் வளர்ச்சி விகிதம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்பதை உலக வங்கியே கூறுகிறது என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்: "அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அனுமதி வழங்க ஆளுனர் தாமதம் செய்வதை காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இவ்விஷயத்தில் மத்திய அரசின் பொம்மையாக தமிழக அரசு செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள ஆளுனர்கள் பெரும்பாலானோர் பாரதிய ஜனதாவின் ஊழியர்களாகவே செயல்பட்டு வருகின்றனர். பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. இதே நிலை சென்றால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். பாரதிய ஜனதா அரசு வருமான வரித்துறையையும், விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்தி எதிர்கட்சிகளை மிரட்டி வருகிறது" என்றார்.
கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.