

அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கைவிரித்துள்ளது. மத்தியில் ஆளும் பெரும்பான்மை இந்துவிரோத, மனுவாத பாஜக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரமே இதற்குக் காரணம்.
இந்துக்களுக்கான ஒரே பாதுகாப்பு அரண் தாம் மட்டுமே என காட்டிக்கொள்ளும் பாஜக அரசு, இவ்விவகாரத்தில் தனக்குத்தானே முகத்திரையைக் கிழித்துக்கொண்டு அம்பலப்பட்டு நிற்கிறது. உழைக்கும் பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கும் பாஜக அரசை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது தொடர்பாக தமிழ்நாட்டின் ஒருமித்த கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கவும் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனத் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீடும் கூட வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
இதற்குக் காரணம் இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரமே ஆகும். இது தொடர்பான கொள்கை முடிவை எடுக்கும் வரை நாங்கள் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் கூட கொடுக்க முடியாது என்று மத்திய அரசு அதில் தெரிவித்திருந்தது. அதனை ஏற்றுத்தான் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனால் இப்போது மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு இந்த ஆண்டு மட்டுமல்ல மத்திய அரசின் கொள்கை முடிவு எடுக்கும் வரை வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஓபிசி எனப்படும் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் எதிராக அப்பட்டமான மனுவாத நிலைபாட்டை பாஜக அரசு எடுத்திருக்கிறது. இதுவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அடிப்படை காரணம்.
ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இதைத்தான் தெரிவித்தார். அதன்பிறகு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டன. உயர் நீதிமன்றத்துக்குப் போகுமாறு உச்ச நீதிமன்றம் சொன்னதால், பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதில் தெளிவாகத் தீர்ப்பை வழங்கியது. 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொன்னதோடு இதற்காக மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஆணையிட்டது.
ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு என்பது சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கிற உரிமையாகும். அந்த உரிமையை மறுத்து மனுஸ்மிருதி அடிப்படையில் ஆட்சியை நடத்துவதால்தான், பிற்படுத்தப்பட்டோர் மருத்துவக் கல்வி பெறுவதை அனுமதிக்க மறுக்கிறது. இதனை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பாஜக என்பது ஓபிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பெரும்பான்மை இந்துமக்களின் எதிரி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு உரிமையை காக்கவும் பாஜக அரசின் மனுவாத சதித் திட்டத்தை முறியடிக்கவும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டுக்கு வழிகாட்டும் மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாடு, இப்போதும் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைபாட்டை மத்திய அரசுக்கு உணர்த்தவும், சட்டரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடவும் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்தியத் தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் இடங்களில், ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்காமல் மத்திய அரசும், மருத்துவ ஆணையமும் தொடர்ந்து வஞ்சித்து வந்தன.
இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானதும், சமூக நீதி அமலாக்கத்தை நிராகரிப்பதுமான இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன.
முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை அணுகி நியாயம் பெறுமாறு அறிவுரை வழங்கி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையில் உள்ளபடி இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என முறையிடப்பட்டது.
இந்த முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இதற்கான நடைமுறைகளை வகுக்க குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை அமலாக்க வேண்டிய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், ஓபிசி மாணவர்களுக்கு
50 சதவித இடஒதுக்கீடு வழங்க முடியாது என மனுத்தாக்கல் செய்தது. மத்திய அரசின் சமூக அநீதியை தடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நடப்பாண்டில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிசி மாணவர்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டது. மனுவாத சிந்தனையில் மத்திய அரசு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் கொள்கைக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளது.
இந்த அநீதிக்கு எதிராக சமூக நீதி, ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தீவிரப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
மருத்துவ படிப்புக்கு ஓபிசி மாணவர்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகுறித்து, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த வருடம் இட ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பில்லை என்று அறிவித்து இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
கல்வி குறித்து எடுக்கும் எந்த முடிவானாலும் மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான காலதாமதமும் இல்லாமல் மாணவர்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.
டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக
மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இந்த பாதிப்புக்குக் காரணமான நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசுக்கும், மறைமுகமாக அதற்குத் துணை போன பழனிசாமி அரசுக்கும், 2007 ஆம் ஆண்டு மத்திய அரசில் அங்கம் வகித்த போது இந்த சமூக அநீதியை ஆரம்பித்து வைத்து இப்போது நாடகமாடும் திமுகவுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்றுவதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளில் இனியாவது பழனிசாமி அரசு அக்கறையோடு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.