

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்குக் கடந்த 12-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவர் உடல்நலம் பெற வேண்டி வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கே.பாலகிருஷ்ணன் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று (அக். 26) வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் இன்று குணமடைந்து இல்லம் திரும்பிவிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சையளித்த டீன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரிலும் தொலைபேசி மூலமாகவும் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலாளர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.