Published : 26 Oct 2020 02:36 PM
Last Updated : 26 Oct 2020 02:36 PM

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு விவகாரம்; அதிமுகவின் அலட்சியப் போக்கால் தமிழக மாணவர்கள் பாதிப்பு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாததற்கு அதிமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 26) வெளியிட்ட அறிக்கை:

"பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் வழக்குத் தொடர்ந்திருந்தன. இதையும் நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தமிழகத்தில் பின்தங்கிய சமுதாய மாணவர்களை கடுமையாகப் பாதிக்கக்கூடியதாகும்.

கடந்த ஜூலை 27 அன்று, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தீர்ப்பில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு பிரதிநிதிகளும், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளரும் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும்; 3 மாதங்களில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு அரசியலமைப்புச் சட்டப்படியோ, வேறு சட்ட ரீதியான காரணங்களோ தடையாக இல்லை என்றும் தெளிவாகத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் பலன்களை உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு சரியாக நடத்தாத காரணத்தால் பாதகமான தீர்ப்பு இன்று கிடைத்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியபடி குழுவை அமைக்கவோ, மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகச் சட்டம் இயற்றவோ எந்த முயற்சியையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பு கிடைத்ததற்கு அதிமுக அரசின் அலட்சியப் போக்குதான் காரணம்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் 2014 இல் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தகைய தீர்ப்பின் மூலம் இதுவரை பெறப்பட்ட வந்த ஓபிசி மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீடும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் 251 மருத்துவ இடங்களில் ஓபிசி மாணவர் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்காத நிலை உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலை எடுத்த காரணத்தால்தான் இன்றைக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசு எடுத்த நிலையும், இந்த வழக்கை அலட்சியப் போக்குடன் நடத்திய அதிமுக அரசும்தான் காரணம் என்று குற்றம்சாட்ட விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சீர்குலைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய பாடம் புகட்டுவதன் மூலமே சமூக நீதியைப் பாதுகாக்க முடியும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x