

அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தவும் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாண்டு இட ஒதுக்கீடு இல்லை என நிராகரித்து, இடைக்கால நிவாரணம் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை இறுதி செய்து அடுத்த கல்வியாண்டு (2021) முதல் அமல்படுத்துவத்துவதற்கு தமிழக அரசு அதிகாரி, மத்திய அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது.
ஆனால், தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% இட ஒதுக்கீட்டை தமிழக ஓபிசி மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு நடப்புக் கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்பதை மத்திய அரசு தெரிவிக்க கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, அகில இந்தியத் தொகுப்புக்கு தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில், தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50% அல்லது 27% என எந்த இட ஒதுக்கீட்டு முறையையும் நடப்புக் கல்வியாண்டில் (2020-2021) அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஏற்கெனவே இட ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் 2021-ம் கல்வி ஆண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில், தமிழக அரசு, அதிமுக, கேவியட் மனுதாரர் டி.ஜி.பாபு ( திமுக ) ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், “50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதை அடுத்த கல்வி ஆண்டில் அமல்படுத்துவது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குழு தேவையில்லை.
மேலும், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உறுதி ஆகிவிட்டதால், அதை நடப்புக் கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும். எந்தத் தாமதமும் தேவையில்லை” எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக தரப்பில், “ஏற்கெனவே அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு என கடைப்பிடிக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முழுமையாகச் செயல்படுத்தவில்லை. எனவே இந்த விவகாரத்தில் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மாநில இட ஒதுக்கீட்டு (69%) முறையை, தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் அமல்படுத்த வேண்டும். அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தற்போது இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழுவில் உரிய அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. எனவே அந்தக் குழுவில் மத்திய சுகாதாரத்துறை இயக்குனர், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோரைச் சேர்த்து குழுவை மாற்றி அமைப்பதோடு, அக்குழுவின் அறிக்கை வரும் 27-ம் தேதிக்குளாக சமர்ப்பிக்க உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தவும் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட முடியாது, என இடைக்கால நிவாரணம் கோரிய மனுவை நிராகரித்தது .