தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா தொடக்கம்

சதய விழா இன்று தொடக்கம்
சதய விழா இன்று தொடக்கம்
Updated on
2 min read

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளான ஐப்பசி சதய நட்சத்திரமான இன்று 1035-வது சதய விழா தொடங்கியது. இதையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழன் சிலைகள் உள்ள இடம் மின்னொளி அலங்காரத்தால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது .

இந்த விழாவின் தொடக்கமாக இன்று (அக். 26) காலை பெரிய கோயிலில் மங்கள இசையோடு விழா தொடங்கியது. தொடர்ந்து, கோயில் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்புப் பூஜைகள் செய்து கோயிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தைப் பாடினர்.

இதனைத் தொடர்ந்து, கோயிலின் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் ராவ், சதய விழாக்குழு தலைவர் துரை. திருஞானம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தர்மபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை
ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை

கோயிலின் அர்த்த மண்டபத்திலுள்ள குஜராத்திலிருந்து மீட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலை முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் கோயில் வளாகத்தில் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஆகியோரது சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகாரம் வீதி உலா நடைபெறுகிறது.

ஒரு நாள் நிகழ்வு

ராஜராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும். இவ்விழாவின்போது பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஒரு நாள் நிகழ்வுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோயிலில் இன்று பக்தர்கள் குறைந்த அளவே தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். சதய விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்கள் சார்பாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்காக தஞ்சாவூர் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in