

கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று மாலை முதல் விநாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால், 3 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தவாறு உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 961 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 49.20 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து நேற்று மாலை முதல் சிறிய மதகுகள் வழியாக 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பெனு கொண்டாபுரத்தில் 41.20 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி 35.20 மிமீ, நெடுங்கல் 27, பாரூர் 26.80, தேன்கனிக்கோட்டை 17, சூளகிரி 12, ராயக்கோட்டை 10, ஊத்தங்கரை 9.80, போச்சம்பள்ளி 8, ஓசூர் 2.50 மீமீ மழை பதிவானது.
நீர்திறப்பு அதிகரிப்பு
கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1040 கனஅடியாக உயர்ந்துள்ளது.இதனால் அணையி லிருந்து 1040 கனஅடி நீர் திறக்கப் பட்டு வருகிறது.