

கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முக்கிய அறுவை சிகிச்சைகள் மூலம் 25 குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பதாக டீன் பி.காளிதாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், கோவை அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகின்றன.
குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவில் கடத்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு உடல் பாதிப்புகளுடன் இருந்த 25 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டுள்ளன. இதில், பிறந்து 7 நாட்களே ஆன குழந்தையும் அடங்கும். பிறவியிலேயே உடல் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு, குடல் அடைப்பு, உணவு குழாய் மற்றும் சுவாசக் குழாய் இணைந்து இருப்பது, மலத் துவாரம் இல்லாமல் இருப்பது, தொப்புள் மூலம் குடல் வெளியே வருவது, குடலின் ஒரு பகுதி இல்லாமல் இருப்பது, குடல் வளராமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அறுவைசிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளன.
இந்த சிகிச்சைகளை குழந்தைகள் நல அறுவைசிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் வெங்கடேச மோகன், பச்சிளங் குழந்தைகள் துறைத் தலைவர் பூமா, மயக்கவியல் துறை மருத்துவர்கள் உள்ளிட்டோர் இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.