

சென்னை ஐசிஎப்-ல் தொழில் பழகுநர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி 4-வது நாளாக நேற்றும் 20 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஐசிஎப் தொழில் பழகுநர் மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜீவா கூறியதாவது:
சென்னை ஐசிஎப் மையத்தில் ஆண்டுதோறும் சுமார் 500 பேர் தொழில் பழகுநர் பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதுவரையில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிட்டர், வெல்டர், கார்பென்டர் உட்பட 9 வகையாக பயிற்சியை முடித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இதுவரையில் எந்த வேலைவாய்ப்பும் வழங்கப் படவில்லை.
ஐசிஎப்-ல் தொழில் பழகுநர் பயிற்சியை முடித்தோருக்கு அந்தந்த ரயில்வே மண்ட லங்களின் பொதுமேலாளர் ஆணைப்படி வேலை வழங்கலாம் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதை அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் அமல்படுத்தி வருகின்றனர். ஆனால், சென்னை ஐசிஎப்-ல் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலை வழங்கக்கோரி தொடர்ந்து 4-வது நாளாக நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரையில் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.