

ஆந்திராவின் புதிய தலைநகர் அமரவாதியின் நிர்மாண விழா வெற்றி பெற வாழ்த்துவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில தலைநகரான அமராவதியின் நிர்மாண விழாவில் பங்கேற்க வேண்டி தாங்கள் அனுப்பிய கடிதம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். புதிய ஆந்திரத்தின் முதல் முதல்வரான உங்களின் கனவு நகரமாக அமராவதி திகழும். உங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்கான அத்தனை நிபுணத்துவத்தையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
அமராவதி விரைவிலேயே தலை சிறந்த நகரகமாக உருப்பெற்று சூரிய ஒளியை காணும் என்று உறுதியாக கூறுகிறேன். அமராவதியின் நிர்மாணத்துக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். ஆந்திர மக்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து மேன்மைகளை பெறவும், நிர்மாண விழா மாபெரும் வெற்றியை பெறவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.