Published : 25 Oct 2020 07:17 AM
Last Updated : 25 Oct 2020 07:17 AM

பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக்க மண்டல அளவில் கிரிக்கெட் மைதானங்கள் அமைக்க முடிவு: தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத் தலைவர் கே.சொக்கலிங்கம் தகவல்

பள்ளி மாணவர்களில் திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்கில், மண்டல அளவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத் தலைவரான முன்னாள் ஐ.ஜி., கே.சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் மதுரை மண்டலக் கூட்டம் திருப்பாலை ராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கத் தலைவராக ஆர்.நல்லமணி, பொதுச் செயலாளராக பி.அருள், இணைச் செயலாளராக சி.மருதுபாண்டியன், பொருளாளராக ஆர்.செந்தில்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மதுரை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத் தலைவரான முன்னாள் ஐ.ஜி., கே.சொக்கலிங்கம் பேசியதாவது: தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இந்த கிரிக்கெட் சங்கம் செயல்படுகிறது. 12, 14, 17, 19 வயதுடைய மாணவர்களுக்கு மாவட்டங்கள் இடையே மாநில அளவிலான போட்டியை நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறோம். பள்ளிகள் அளவிலேயே அடிக்கடி போட்டிகளை நடத்தி தகுதியான கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் தேசிய அளவில் சாதனைபுரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு மாநில சங்கங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.

தேசிய அளவில் 14 வயதுடையோருக்கான மாநில சாம்பியன் போட்டி வரும் நவ.26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. சிறந்த மாணவ கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் ஆடுகளம் இல்லாதது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை ஆகிய 4 மண்டல தலைமை இடங்களிலும் தலா ஒரு கிரிக்கெட் மைதானம் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்படும். தன்னார்வலர்கள் உதவியுடன் இதை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

சங்கத்தின் நிறுவனரான பொதுச்செயலாளர் பி.பி.சுனில்குமார் பேசுகையில், பள்ளி மாணவர்களிலிருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களை வெளி உலகுக்கு அடையாளப்படுத்துவதில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். இதில் முழு வெற்றியை எட்டும் வகையில் சீரமைப்புப் பணிகள் வேகமாக நடக்கிறது. இதற்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

மதுரை மாவட்ட தலைவர் ஆர்.நல்லமணி பேசுகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கிரிக்கெட் ஆர்வம் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினர் அடையாளம் காணப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். அவர்களை தேசிய அளவில் சிறந்த வீரர்களாக உருவாக்க முயற்சி மேற்கொள்வோம். பெண்கள் கிரிக்கெட் அணி உருவாக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x