

பெண்களை இழிவுபடுத்திப் பேசிய திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் நினைவிடத்தில் உள்ள சிலைகளுக்கு பாஜக முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காளையார் கோயில் கோபுரத்தை ஆங்கிலேயர் இடிக்கக் கூடாது என்பதற்காக சரணடைந்து உயிர் நீத்தவர்கள் மருது பாண்டியர்கள். கோயில்கள், இந்துப் பெண்கள் குறித்து திமுக கூட்டணியினர் அவதூறாகப் பேசி வருகின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.
சமஸ்கிருதம் தெரியாத திருமாவளவன் அது குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. அவரைக் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.