

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உணவு, தரக் கட்டுப்பாட்டுக் குழுவினர் நெல் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உணவு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி யாதேந்திர ஜெயின் தலைமையில் யூனூஸ், ஜெய்சங்கர், பசந்த் ஆகியோர் கொண்ட குழு நாகை மாவட்டத்துக்கு நேற்று வந்தது. கீழ்வேளூர் தாலுகா சாட்டியக்குடியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் இருந்து நெல் மாதிரியை பரிசோதனைக்காக சேகரித்துக் கொண்டனர்.
பின்னர் யாதேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துஉள்ளனர். ஆனால், அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கிறது. 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாமா என்பதற்காக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லை ஆய்வுக்காக எடுத்துச் செல்கிறோம். ஆய்வகத்தில் ஆய்வு செய்த பின் அதன் அறிக்கையைப் பெற்று அரசிடம் சமர்ப்பிப்போம் என்றார்.
தொடர்ந்து கீழ்வேளூர் தாலுகா வெண்மணியில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கும் சென்றனர்.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மன்னார்குடி அருகே ரிஷியூரில் உள்ள கொள்முதல் நிலையம், ஆதனூர் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் நல்லவன்னியன்குடிக்காடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த விவசாயிகளிடம் நெல்லின் தரம், ஈரப்பதம் தற்போது எப்படி உள்ளது எனக் கேட்டறிந்தனர். விவசாயிகள் கூறிய பதில்களைக் குறிப்பெடுத்துக் கொண்டனர். ஆய்வின்போது ஆட்சியர் ம.கோவிந்தராவ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மத்திய குழுவினர் தஞ்சாவூரில் இரவு தங்கினர். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் சில இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.