

ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
மருது பாண்டியர்களின் 219-வது நினைவு தினம் நேற்றுஅனுசரிக்கப்பட்டது, இதையொட்டி, முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘தமிழ் சொந்தங்களுக்கு விடுதலை வேட்கையை விதைத்து, நம் தாய்த் திருநாட்டில் இருந்து ஆங்கிலேயரை விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரையிலான காலகட்டத்தில் போராடிய மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு தினத்தில் அவர் தம் தியாகத்தையும் வீரத்தையும் வணங்கி போற்றுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், ‘தமிழர் இனம் காக்க ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்து தீரத்துடன் போராடி தன்னுயிர் நீத்து தன்மானம் காத்த வீரத்தமிழர்களான மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்’ என பதிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் புகழாரம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தாய் மண்ணைக் காக்க தமிழ் மன்னர்களை ஒருங்கிணைத்து, எதிரிகள், துரோகிகளை எதிர்கொண்டு சிம்மசொப்பனமாக விளங்கிய மருதிருவரின் தியாகத்தைப் போற்றுவோம்’ என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மலர் தூவி அஞ்சலி
மருது சகோதரர்கள் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னைதேனாம்பேட்டையில் உள்ளதிமுக தலைமை அலுவலகமானஅண்ணா அறிவாலயத்தில் மருதுபாண்டியர்களின் படத்துக்கு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர், அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் மருது பாண்டியர்களின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.