ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க சந்தைகளில் குவிந்த மக்கள்

பூக்கடைப் பகுதியில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள்.
பூக்கடைப் பகுதியில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள்.
Updated on
1 min read

ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க சென்னை பாரி முனை, அரும்பாக்கம், பெரம்பூர், எம்ஜிஆர் நகர், தியாகராய நகர் உள்ளிட்ட சந்தைகளில் பொதுமக்கள் அதிக அளவில் நேற்று குவிந்தனர்.

ஆண்டுதோறும் கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆயுத பூஜையைமுன்னிட்டு, பூஜைக்கு தேவையானபொரி, கரும்பு, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், மாவிலைத் தோரணம், வாழைக் கன்று, பழ வகைகள், பூக்கள் உள்ளிட்டவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதனால் பொதுமக்கள் அருகில் உள்ள சந்தைகளில் பொருட்களை வாங்க நேற்று குவிந்தனர்.

குறிப்பாக சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சந்தை, பெரம்பூர், அரும்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயபுரம், திருவொற்றியூர், அம்பத்தூர், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இந்த சந்தைகளில் சில்லறை விலையில் தேங்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை, 5 தென்னை ஓலை தோரணங்கள் கட்டு ரூ.20, ஒரு வாழை இலை ரூ. 6, பூசணிக்காய் ரூ.50, மாவிலைக் கொத்து ரூ.20,துளசி கட்டு ரூ.20, இரு வாழைக்கன்று ரூ.50 முதல் ரூ.100, சாமந்தி, மல்லி, கனகாம்பரம் முழம்ரூ.30, கதம்ப பூ முழம் ரூ.40, ஒரு படி பொரி ரூ.20, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.70, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.120, ஆப்பிள் கிலோ ரூ.140, சாத்துக்குடி ரூ.60, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.90, மாதுளை ரூ.120, ஒரு கரும்பு ரூ.80 என விற்பனை செய்யப்படுகின்றன.

ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள், இதுநாள் வரை நேரடியாக கோயம்பேட்டுக்கு வந்து அதிக அளவில் பொருட்களை வாங்கிச் சென்றனர். தற்போது அந்த சந்தை இல்லாததால், பிற பகுதிகளில் வாங்கிச் சென்றனர். இதனால் சந்தைகள் இயங்கும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in