

மக்களின் வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ள இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ள ராஜஸ்தான் எழுத்தாளர் நேற்று தஞ்சாவூர் வந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியைச் சேர்ந்தவர் அன்கித் அரோரா(30), எழுத்தாளர். இவர் இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து நாட்டின் பாரம்பரியம், கலை, வாழ்வியல் முறைகள் ஆகியவை குறித்துஆய்வு செய்து, அதை ஆவணங்களாக பதிவு செய்ய முடிவு செய்தார். இதற்காக, கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் தனது பயணத்தை தொடங்கினார்.
இதுவரை 15 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் சுற்றுப்பயணம் செய்து அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வு முறைகள், விழாக்கள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொண்டுள்ளார். அதன்படி, நேற்று தஞ்சாவூர் வந்த அவர் தலையாட்டி பொம்மை, வீணை போன்றவற்றை தயாரிப்பது குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து அன்கித் அரோரா கூறும்போது, ‘‘இதுவரை சைக்கிளில் 19 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு பயணம் செய்துள்ளேன். விவசாயிகள், கலைஞர்கள், மலைவாழ் மக்கள், கைவினைக் கலைஞர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளேன்.
சத்தீஸ்கர், ஒடிசா, தமிழகம் போன்ற மாநிலங்களில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சிறப்பாக உள்ளது. இன்னும் 3 ஆண்டுகள் சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதன்பிறகு எனது அனுபவங்களை கட்டுரையாக வெளியிட உள்ளேன்’’ என்றார்.