

ஆயுதபூஜை இன்று (அக்.25) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னை கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க தயாராக இருந்தது.
இருப்பினும், கரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்திருந்தனர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால், சென்னையில் கூடுதலாகஇயக்கப்பட்ட மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆயுதபூஜையையொட்டி வரும் தொடர்விடுமுறையால் கோயம்பேடு, தாம்பரம் பேருந்துநிலையங்களில் மக்கள் கூட்டம்அலைமோதும். இதனால், வழக்கமாக செல்லும் பேருந்துகளைவிட 800 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாகவே இயக்குவோம்.
ஆனால், இந்த ஆண்டில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளிலேயே கூட்டம் இல்லை. இதனால் 300 சிறப்பு பேருந்துகள் மட்டுமே இயக்கியுள்ளோம். கரோனா அச்சத்தால் மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்க்கின்றனர். கடந்த ஆயுத பூஜையை ஒப்பிடுகையில் பயணிகள் கூட்டம் 60% குறைவாகஉள்ளது. இதனால், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது’’என்றனர்.