Published : 25 Oct 2020 06:18 AM
Last Updated : 25 Oct 2020 06:18 AM

இலங்கை பிரதமர் ராஜபக்ச தமிழில் நவராத்திரி வாழ்த்து

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, நவராத்திரி விழாவை குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது அவர் தமிழில் நவராத்திரி வாழ்த்து கூறினார்.

இலங்கையின் மக்கள் தொகை சுமார் 2.17 கோடியாகும். இதில் 70.2 சதவீதம் பேர் பவுத்த மதத்தை பின்பற்றுகின்றனர். 12.6 சதவீதம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழர் பண்டிகைகளை தனது வீட்டில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி கொழும்பில் உள்ள பிரதமரின் இல்லத்தில் கடந்த 21-ம் தேதி நவராத்திரி விழா நடைபெற்றது. பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் நவராத்திரி விழாவை கொண்டாடினார்.

அவரது வீட்டில் கொலு வைக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. விழாவில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பேசினார். அவர் கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலங்கை அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நவராத்திரி தினத்தில் கரோனா தொற்றை ஒழிக்க உறுதி ஏற்போம். அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.

சிங்கள மொழியில் பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, இறுதியில் "உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்" என்று தமிழில் கூறினார்.

நவராத்திரி விழாவை ஒட்டி இலங்கை மத விவகாரத் துறை சார்பில் அண்மையில் 40 இந்து கோயில்களுக்கு தலா ரூ.50,000 நன்கொடை வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x