

நமது தேசத்தின் அடையாளமாக கதர் ஆடைகள் உள்ளன என்று ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் 147-வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி விற்பனை கண்காட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் கே.ரோசய்யா கலந்துகொண்டு விற்பனையை தொடங்கிவைத்தார். இவ்விரு விழாக்களையொட்டி பொன்னேரியில் உள்ள அன்பு ஆதரவற்றோர் இல்லத்துக்கு காதி கிராமோத்யோக் பவன் சார்பில் ஆடைகளை இலவசமாக வழங்கினார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:
நமது தேசத்தின் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தி, மதங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் அப்பாற்பட்டவர். அவர் சுதந்திரத்தின் அடையாள உடையாக கதர் உடையை அங்கீகரித்தார். வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள் வாங்குவதைத் தடுக்கவும், உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை பயன்படுத்தும் மனோபாவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திலும்தான் காதி தொடங்கப்பட்டது. காதி என்பது தேச விடுதலை இயக்கத்தின் அடையாளம் மட்டுமல்லாது, தேசத்தின் அடையாளமாகவும் மாறியிருக்கிறது. காதி கிராமோத்யோக் பவன் தற்போது நவீன வியாபார நுட்பங்களை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புதுப்புது ஆடை வடிவமைப்புகளை விற்பனைக்கு கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா பேசினார்.
விழாவில் பங்கேற்ற கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி பேசும்போது, “2006-2011 வரையிலான காலகட்டத்தில் நலிவடைந்திருந்த தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு ஏற்றம் பெற்றது. 2008 முதல் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ரூ.36 கோடியே 86 லட்சம் ஓய்வூதிய பலன்களை முதல்வர் வழங்கியுள்ளார். கதர் வாரிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.10 கோடி முன்பணமாகவும் வழங்கியுள்ளார்” என்றார்.