

தமிழகத்தில் உள்ள 6 மத்திய சிறைச்சாலைகளுக்கு பின்லேடன் படத்துடன் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை புழல் சிறையில் போலீஸாருக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 6 கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகள் மீது போலீஸார் தாக்குதல் நடத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்களும் நடத்தினர். இந்நிலையில், சென்னை புழல், திருச்சி, கோவை, மதுரை, கடலூர், வேலூர் ஆகிய மத்திய சிறைச்சாலைகளுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக சிறைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அதிகமான நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகி றது. அதற்குரிய பலனை விரைவில் அனுபவிக்க நேரிடும். அதற்கான நாட்கள் எண்ணப்படுகிறது. எங்களை கொடுமைப்படுத்தும் சிறைச்சாலைகளை விரைவில் குண்டு வைத்து தகர்ப்போம் என்று ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தில் இந்தியாவின் வரைபடமும் அதில் பின்லேடன் படமும் இருந்தது. கடிதத்தின் அடியில் அல் கொய்தா இயக்கம், உக்கடம், கோவை. என்று கூறப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த கடிதம் வந்ததை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்பியது யார் என்பது குறித்து உளவுப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.