சென்ட்ரல் ரயிலில் குண்டு வைத்தது ‘தென்னிந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு?: சிபிசிஐடி தீவிர விசாரணை

சென்ட்ரல் ரயிலில் குண்டு வைத்தது ‘தென்னிந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு?: சிபிசிஐடி தீவிர விசாரணை
Updated on
1 min read

குவாஹாட்டி ரயிலில் குண்டு வைத்தது தென்னிந்திய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றிருந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவை சேர்ந்த ஸ்வாதி(24) என்ற பெண் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர். மே 1-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்து 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. குண்டு வைத்ததற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவும் இல்லை. இதனால் சிபிசிஐடி விசாரணை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரும்பியுள்ளது.

ரயிலில் வெடித்த குண்டில் முக்கிய மருந்துப் பொருளாக அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அல்உம்மா மற்றும் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள்தான் அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி குண்டு தயாரித்து வெடிக்க செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து மத அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கூட்டாளியாக இருந்தவர் அபுபக்கர் சித்திக். இவரை கடந்த 11 ஆண்டுகளாக தமிழக காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

வெடிகுண்டுகள் செய்வதில் வல்லவரான அபுபக்கர் சித்திக்கிற்கும் சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் சிபிசிஐடி போலீஸுக்கு ஏற்பட்டுள்ளது.

அபுபக்கர் சித்திக் தலைமையில் 'சவுத் இந்தியன் முஜாகிதீன்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பதாகவும், இந்த அமைப்பினர் ஓசையில்லாமல் பல நாச வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சிபிசிஐடியினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அபுபக்கர் சித்திக்கை பிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு தென்னிந்தியா வருவதை அபுபக்கர் தவிர்த்து வருவதாகவும், தொலைபேசியில் அபுபக்கர் கொடுக்கும் கட்டளைகளை செய்ய பலர் தமிழகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொல்கத்தா அருகே உள்ள மலைகள் நிறைந்த பகுதிகளில் அபுபக்கர் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அபுபக்கரை பிடிக்க சிபிசிஐடி பிரிவைச் சேர்ந்த 2 தனிப்படைகள் கொல்கத்தா சென்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in