

அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு 24 மணி நேரமும் இயங்கினால் தனியார் மருத்துவமனைகளில் ஏழை மக்கள் தங்களது பணத்தை செலவிடமாட்டார்கள் என்று வேலூரைச் சேர்ந்த ஜோதி என்பவர் ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் அரசு மருத்துவ மனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கிறார்கள். அரசு மருத்துவ மனைகளில் புற நோயாளிகள் பிரிவு காலை நேரத்தில் மட்டும் செயல்படுகிறது. அதன்பிறகு சாதாரண நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாது. வேறு வழியே இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று நோய்கள் குணமாவதைவிட அங்கு வசூலிக்கும் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டால் பொது மக்களுக்கு வசதியாக இருக்கும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வாய்ப்பு இல்லாத நிலையிலேயே ஏழைகள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். எனவே, அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டால் ஏழைகளின் சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும்’’ என்றார்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாரித்தபோது, ‘‘அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை புறநோயாளிகள் பிரிவு இயங்குகிறது.
அரசு மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 முதல் 5 மணி வரையும் செயல்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும் அதன்பிறகு சில குறிப்பிட்ட துறைகளில் 10 மணி முதல் 12 மணி வரை புற நோயாளிகள் பிரிவு இயங்குகிறது. புற நோயாளிகளுக்கான சிகிச்சை முடிந்ததும் அவசர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றனர்.
இதுதொடர்பாக, மருத்துவத் துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்கள் இருவரும் தங்களுக்குள் பணிகளை பகிர்ந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். அதேபோல, வட்டார சுகாதார மருத்துவ நிலையங்களில் 5 மருத்துவர்கள் இருப்பார்கள். இவர்கள் சுழற்சி அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.
வட்டார சுகாதார நிலையங்கள் மட்டும் 24 மணி நேரமும் இயங்கும் மையமாக இருக்கிறது. புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிப்பது, உள் நோயாளிகளை 5 முறை கண்காணிப்பதுடன் பிரசவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளையும் செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தனது பணியை முடித்துவிட்டு பிறகு வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரவு பணியும் இருப்பதால் ஒவ்வொரு அரசு மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணி இருக்கும்.
அரசு மருத்துவக் கல்லூரியிலும் இதே நிலைதான். மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக 24 மணி நேரமும் புறநோயாளிகள் பிரிவு செயல்பட வாய்ப்பு இல்லை. ஒரு நாள் பணியை வகைப்படுத்தித்தான் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. உள் நோயாளிகளையும் கவனிக்க வேண்டும்.
அவசர நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்படும்போது 24 மணி நேரமும் புற நோயாளிகள் பிரிவு செயல்பட வாய்ப்புள்ளது. ஒரு மருத்துவரால் ஒரு நாளில் எத்தனை நோயாளிகளை கூர்ந்து கவனிக்க முடியும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த இக்கட்டான நிலையைப் போக்க தமிழக அரசு அவசர மருத்துவ உதவிக்காக ‘104’ தொலைபேசி எண் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்கான தீர்வு குறித்தும் மருத்துவர்களை அணுக வேண்டிய அவசியம் குறித்தும் விளக்குவார்கள்’’ என்றனர்.