

திரையரங்குகளின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துத் தரவேண்டும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து கோவில்பட்டியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஊரடங்கு காலத்தையொட்டி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துத் தரவேண்டும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் நிலையில் உள்ளது. அவர்கள் மேலும் சில கோரிக்கைகளை வைத்திருந்தனர். வரும் 28-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் திரையரங்குகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்வார்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
மேலும், மனு ஸ்மிருதியில் இருப்பதாகக் கூறி குறிப்பிட்ட மதம் சார்ந்த பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதில் அளிக்கையில், ''யார் யார் மனதைப் புண்படும்படி பேசினாலும் தவறுதான். திருமாவளவன் கூறியது போன்று சொல்லப்படவில்லை. அவர் கூறியது தவறு எனத் தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் புரிந்துகொண்டு அந்த அர்த்தத்தில் அவர் கூறியிருந்தால் திரும்பப் பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும்.
ஊரடங்கு காலத்தை முன்னிட்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார்” என்று பதிலளித்தார்.