Published : 24 Oct 2020 09:00 PM
Last Updated : 24 Oct 2020 09:00 PM

7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்; ஆளுநரும் முதல்வரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை

நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி விவசாயச் சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டாமா? அவர் விவசாயி அல்ல, விவசாயியைப் போல வேஷம் போடுபவர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது. இந்தப் பச்சைத் துரோகத்தை மறைக்கவே பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இன்று நாமக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

அப்போது ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பேசிய உரை:

“இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு முன்னால் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இப்போது மாலையில் நாமக்கல் மாவட்டத்தின் முப்பெரும் விழாவில் நான் கலந்து கொள்கிறேன். நீட் தேர்வால் சாதாரண, சாமானிய ஏழை மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட அவர்களுக்கு ஓரளவுக்காவது இடம் கிடைப்பதற்காக 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள்.

அதற்கு 40 நாட்களாகியும் தமிழ்நாட்டு ஆளுநர் இதுவரையில் அனுமதி கொடுக்கவில்லை. அனுமதி கொடுக்காத ஆளுநரை முதல்வரும் தட்டிக் கேட்கவில்லை. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இரண்டு பேரின் முகத்திரையைக் கிழிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று நாம் நடத்தினோம்.

அவர்கள் நாடகம் ஆடுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு வாரத்திற்குள் ஆளுநர் அனுமதி தரவில்லையென்றால் இந்த ஆண்டு மொத்தம், அரசுப் பள்ளி மாணவர்கள் 8 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும் என்பது எவ்வளவு கொடுமையானது.

எல்லோரும் படிக்க வேண்டும் - எல்லோரும் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திமுக. இட ஒதுக்கீடு கொடுத்தால்தான் சாமானியர், சாதாரண மக்கள் பள்ளி - கல்லூரிகளில் நுழைய முடியும். அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு கொடுத்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. அதேபோல் கவுண்டர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார். அருந்ததியர் சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தார்.

அருந்ததியர் சமுதாயத்தினருக்கான உள் ஒதுக்கீட்டைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததே அடியேன் நான்தான். தலைவர் சார்பில் அன்று நான் தாக்கல் செய்தேன். இப்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் பார்த்துப் பார்த்து சலுகை கொடுத்தோம் என்றால் என்ன காரணம்? எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

அதைத் தடுக்க நினைக்கின்றன மத்திய - மாநில அரசுகள். ஆனால், எந்தத் தடைகள் வந்தாலும் அதை உடைத்து சமூக நீதியை நாம் நிலைநாட்டுவோம். இன்று பொற்கிழி பெற்றவர்கள் அனைவரும் திமுக தொண்டர்கள் மட்டுமல்ல, அவர்கள் இந்த இயக்கத்தின் தியாகிகள்.

பொதுவாகவே மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் பெருந்தொழில்களாக இருந்தாலும், சிறு, குறு தொழில்களாக இருந்தாலும் சரி. அவை அனைத்துமே பின்னடைவைச் சந்தித்தன. இதில் கரோனா நோய்ப்பரவலும் அதிகம் ஆனதால் இத்தகைய தொழில்கள் மிகமிக மோசமான பின்னடைவைச் சந்தித்துவிட்டன.

பின்னலாடைத் தொழில், நெசவுத் தொழில், துணிகள் தயாரிப்பு, மோட்டார் உதிரி பாகம் தயாரிப்பு, மஞ்சள் தயாரிப்பு, பட்டாசுகள் உற்பத்தி - இப்படி எல்லாமே பெரும் பின்னடைவைச் சந்தித்துவிட்டன. இதில் மிகப்பெரிய பின்னடைவுக்கு உள்ளாக இருப்பது வேளாண்மைதான்.

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அது மட்டுமல்ல, இந்தச் சட்டங்களால் வேளாண்மைத் துறையே மொத்தமாக சிதைந்துபோகும்.

* விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று எதையும் இந்தச் சட்டங்கள் சொல்லவே இல்லை!

* தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லி, பெரிய வியாபாரிகள், பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு விவசாயிகளை அடிமைகளாக ஆக்குகிறது!

* உணவுப் பாதுகாப்பும், நியாயவிலைக் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகமும், கேள்விக்குறியாகும்.

* உழவர் சந்தைகளை இனி அனுமதிக்க மாட்டார்கள்.

* குளிர்பதனக் கிடங்கு வைத்திருப்பவர் கையில் விவசாயம் போய்விடும்.

* கரும்பு ஆலைகளுக்கு கரும்பைக் கொடுத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் பணம் வாங்க முடியாமல் தவிக்கும் பல ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளைப் போல, அனைத்து விவசாயிகளையும் தவிப்புக்கு ஆளாக்க நினைக்கிறார்கள்.

எனவேதான் இந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் திமுக எதிர்த்தது. மாநிலங்களவையிலும் எதிர்த்தது. உச்ச நீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராட்டம் நடத்தினோம்.

''நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்'' என்ற பிரதமர் மோடி, இருக்கும் வருமானத்தை மட்டுமல்ல, விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தையும் பறிக்கத் திட்டம் போடுகிறார்.

இதனை எடப்பாடி பழனிசாமி எதிர்த்திருக்க வேண்டும். துணிச்சல் இருக்கிறதா? இல்லை. நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தது அதிமுக தனது நாற்காலியைக் காக்க விவசாயிகளை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி.

இந்தப் பச்சைத் துரோகத்தை மறைக்கவே பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் பழனிசாமி. நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி விவசாயச் சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டாமா? அவர் விவசாயி அல்ல; விவசாயியைப் போல வேஷம் போடுபவர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் டன் கணக்கில் நெல்மணிகள் வீணாகி வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழக அரசின் முறையான திட்டமிடல் இல்லாததாலும் முன்னேற்பாடுகள் செய்யப்படாததாலும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் டன் வரை நெல் மணிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதைப் பார்த்து முதல்வர் பழனிசாமிக்குக் கண்ணீர் வந்ததா? கவலைப்பட்டாரா? அரசு அறிவித்துள்ளபடி நெல் கொள்முதல் செய்யப்படாததால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வருவதாக தஞ்சை மாவட்ட விவசாயிகள் கடந்த ஒரு வார காலமாக வேதனை தெரிவித்து வருவது முதல்வருக்குத் தெரியுமா?

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் செய்ததா? என்றால் இல்லை. தஞ்சையை அடுத்துள்ள குருவாடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியருடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள், நாள் ஒன்றுக்கு 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சரிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு அமைச்சர் முறையான பதிலைச் சொல்லவில்லை.

இதனால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி விட்டது. இதுவாவது முதல்வருக்குத் தெரியுமா? தஞ்சை மாவட்டத்தில் பெய்த கனமழையால், நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன என்ற செய்தியை ஊடகங்கள் ஒளிபரப்பின. இதுவாவது முதல்வருக்குத் தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நெல் மணிகளை மழைநீர் அடித்துச் சென்றதால் ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டைகள் வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கூறியிருக்கிறார்கள்.

கணினி சரியில்லை, சாக்கு மூட்டைகள் இல்லை, அதிகாரிகள் வரவில்லை என்ற பொய்களைச் சொல்லி ஒரு பக்கம் நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளிடம் இருந்தவை அழிகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக வைக்க இடமில்லாமல் அவையும் அழிகின்றன. இதுதான் பழனிசாமி ஆளும்போது நாட்டின் நிலைமை என்றால் இதனை விவசாயி ஆட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்?

குறுவை அறுவடை தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. இன்னமும் கொள்முதல் செய்வதில் இவ்வளவு குழப்பம் இருக்கலாமா? நெல்லைச் சேமித்து வைப்பதற்கு இடவசதி இல்லை என்று சொல்லி கொள்முதல் செய்யாமல் இருந்தால் விவசாயிகள் எங்கே சேமித்து வைப்பார்கள்?

இவ்வளவு பிரச்சினைகளும் அரசின் செயல்பாட்டால் இருக்கும் போது, நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி இனி வாங்க மறுப்பார்கள். இதற்கெல்லாம் முதல்வர் என்ன தீர்வு சொல்லப் போகிறார்?

இவை அனைத்தையும் விட இன்னும் மோசமாக, நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளிடம் அதிகாரிகள் பணத்தை லஞ்சமாக வாங்கும் கொடுமையும் இந்த அதிமுக ஆட்சியில் நடந்துள்ளது. எங்களுக்கு கமிஷன் கொடுத்தால்தான் நெல்லை வாங்குவோம் என்று விவசாயிகளை சில அதிகாரிகள் மிரட்டி உள்ளார்கள். இதுபற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருவர் வழக்கே தாக்கல் செய்துவிட்டார்.

“விளைபொருளை விற்க முடியாமல் விவசாயி தவிக்கும் நிலையில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பது வேதனைக்குரியது. இது பிச்சை எடுப்பதற்குச் சமம்" என்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய பெஞ்சு கூறியுள்ளது. இது முதல்வர் பழனிசாமிக்குத் தெரியுமா? இதுதான் விவசாயியான பழனிசாமியின் ஆட்சியில் லட்சணம்.

‘விவசாயி, விவசாயி’ என்று சொல்லிக் கொண்டால் போதாது. விவசாயியைப் போல நடக்கவேண்டும், விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும். விவசாயிகளுக்காக திட்டம் போட வேண்டும். அப்போதுதான் விவசாயி என்று சொல்லிக்கொள்ள முடியும். அது இல்லாமல் மக்களிடம் நாளுக்கு ஒரு வேடம் போட்டு நடிக்கக் கூடாது.

இந்த அரசாங்கம் தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகிவிட்டது என்று ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. மின்மிகை மாநிலம் என்றால் அரசாங்கமே மின்சாரத்தைத் தயாரிக்க வேண்டும். தமிழக மக்களின் தேவைக்குப் போக மீதியை தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது வெளிமாநிலத்துக்கோ விற்கவேண்டும்.

அப்படி விற்றால்தான் இதனை மின்மிகை மாநிலம் என்று சொல்ல முடியும். அதிமுக அரசு தமிழகத்தில் இருக்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு மின்மிகை மாநிலம் என்று போலியாகப் பெருமை பாராட்டிக் கொள்கிறது.

தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அப்படிச் செய்வது தமிழக அரசின் சாதனையா என்று கேட்கிறேன். இவர்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு தொகைக்கு வாங்குகிறார்கள் என்ற தொகையைச் சொன்னால் அதிர்ச்சி அடைவீர்கள். 2014 ஆம் ஆண்டு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய மொத்தத் தொகை 29,278 கோடி ரூபாய்.

2016 ஆம் ஆண்டு தனியாரிடம் இருந்து வாங்கியதால் ஏற்பட்ட செலவு 35,692 கோடி ரூபாய். 2019 ஆம் ஆண்டு தனியாரிடம் இருந்து வாங்கியதால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட செலவு 39,058 கோடி ரூபாய். இத்தனை ஆயிரம் கோடி கொடுத்து மின்சாரம் வாங்குவதால் அமைச்சர் அடைந்த பலன் எவ்வளவு என்பது அவருக்குத்தான் தெரியும்.

இப்படி தனியாரிடம் வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை மின்சாரம் தயாரிப்பதில் இந்த அதிமுக அரசு காட்டியதா என்பதுதான் என்னுடைய கேள்வி. 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தது முதல் அரசு மூலமாக எவ்வளவு மின்சாரத்தைத் தயாரித்தார்கள்? அதை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உடன்குடி மின் திட்டத்தைப் பத்து ஆண்டுகள் கழித்தும் இன்னமும் முடிக்காதது ஏன்? 2018 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகள் இன்று வரை முடிக்கப்படாதது ஏன்?

அதிமுக ஆட்சி அமைந்த 2011 ஆம் ஆண்டு 6200 மெகாவாட் தயாரிப்போம் என்று சொல்லி அறிவிக்கப்பட்ட ஆறு திட்டங்களின் இன்றைய நிலைமை என்ன? அரசாங்கம் மின்சாரம் தயாரித்தால், தனியாரிடம் வாங்க முடியாது. தனியாரிடம் வாங்கினால்தான் தனக்குப் பணம் கிடைக்கும் என்பது ஒன்று தான் இவர்களது நோக்கம்.

இப்படி எல்லாவற்றிலும் தனக்கு என்ன லாபம் என்று பார்த்து முதல்வரும் துணை முதல்வரும் அமைச்சர்களும் செயல்படுவதால்தான் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் அதலபாதாளத்துக்குப் போனது.

எந்தத் திட்டத்தால் எவ்வளவு லாபம் என்று நினைத்து இவர்கள் செயல்பட்டதால் இவர்களது ஊழல்கள், முறைகேடுகள், லஞ்சங்கள், அதை வைத்து வாங்கிக் குவித்த சொத்துகள் அனைத்தின் பட்டியலும் மத்திய பாஜக அரசின் வசம் இருக்கிறது. அதை வைத்து பாஜக தலைமையானது, அதிமுகவை மிரட்டிக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டை மொத்தமாக டெல்லி பாஜக தலைமைக்கு அடமானம் வைத்துவிட்டு இவர்கள் அதற்கு பிரதிபலனாக கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கொள்ளைக் கும்பலை விரட்ட வேண்டிய கடமை நாட்டு மக்களுக்கு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, கொங்கு சீமையானது தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள். அதையும் விட அதிகமாக மாபெரும் வெற்றியானது இந்தப் பகுதியில் இருந்து திமுகவிற்குக் கிடைக்க வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x