Published : 24 Oct 2020 07:48 PM
Last Updated : 24 Oct 2020 07:48 PM

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவி: போக்குவரத்து போலீஸாரின் புது முயற்சி

சென்னை போக்குவரத்துக் காவல்துறை மூலம் புலனாய்வுப் பிரிவுகளில் தனி அதிகாரியை நியமித்து விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உதவி பெற்றுத் தரவும், தகுந்த ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் போக்குவரத்துக் கூடுதல் ஆணையாளர் கண்ணன் ஆலோசனையின்படி காவல் இணை ஆணையாளர் போக்குவரத்து (தெற்கு) லட்சுமி வழிகாட்டுதலின்படி காவல் துணை ஆணையர்கள் போக்குவரத்து (தெற்கு) என்.குமார், காவல் துணை ஆணையர் போக்குவரத்து (கிழக்கு) செந்தில்குமார் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில். போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவிடும் பொருட்டு அனைத்துப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுகளிலும் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் நியமிக்கப்பட்டு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்பேரில் உதவிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், விபத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கு உதவிடும் பொருட்டு ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இதில் அரசால் வழங்கப்படும் விபத்து உதவித்தொகை பெறுவதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து. அதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற்று, விபத்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்தும் உதவி வருகிறார்கள்.

மேற்கண்ட அலுவலர்களின் துரித நடவடிக்கையால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் விபத்து உதவித்தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவது மிகவும் எளிதாகியுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இது தவிர வாகன விபத்தினை ஏற்படுத்திய வாகன ஓட்டிகளைச் சம்பந்தப்பட்ட போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் நேரில் வரவழைத்து விபத்தினால் ஏற்படுகின்ற உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை எடுத்துக் கூறியும் குடும்பத்தில் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தவர்களின் உயிரிழப்பினாலும். காயமடைந்தவர்களின் வேலை இழப்பினால் வருமானம் இன்றி வாடுவதுடன் அதன் காரணமாக ஏற்படுகின்ற உடல் உபாதைகளால் அனுபவிக்கிற இன்னல்களையும் எடுத்துக் கூறி அவர்களது செயலின் பாதிப்பை உணரச் செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் அவர்கள் பாதிப்பின் தீவிரத்தை உணர்வதுடன் தொடர்ந்து விபத்தில்லாது வாகனத்தைச் செலுத்துவதும் தன்னைப் போன்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கு விபத்தில்லா வாகனம் ஓட்ட வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்”.

இவ்வாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x