7.5% உள் ஒதுக்கீடு; முழு வேலை நிறுத்தத்துக்கு மாநில அரசு அழைப்பு விடுக்கலாம்: முத்தரசன்

7.5% உள் ஒதுக்கீடு; முழு வேலை நிறுத்தத்துக்கு மாநில அரசு அழைப்பு விடுக்கலாம்: முத்தரசன்
Updated on
1 min read

மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசு, ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மாநில அரசு முழு வேலைநிறுத்தப் போராட்டத்திற்குக் கூட அழைப்பு விடுக்கலாம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. மனுதர்ம நூலில் பெண்களைப் பற்றி என்ன கூறியுள்ளதோ அதைத்தான் அவர் தெரிவித்திருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.

வெங்காயத்தை நியாயவிலைக் கடைகள் மூலம் மக்களுக்குத் தமிழக அரசு விநியோகம் செய்ய உத்தரவாதம் அளிக்க வேண்டும். வெங்காயத்தை இருப்பு வைக்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு வேண்டுமானாலும் விவசாயப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று சமீபத்திய மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இட ஒதுக்கீடு கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை. மருத்துவக் கல்வியில் 7.5% உள் இட ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசு, ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி தமிழக அரசு முழு வேலைநிறுத்தப் போராட்டத்திற்குக் கூட அழைப்பு விடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு யூரியா போன்ற வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க மாநில அரசு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல நகரங்களை நவீனப்படுத்துவதாகக் கூறி ஆங்காங்கே குழிகளைத் தோண்டியும், சாலைகளைப் பெயர்த்தும், பேருந்து நிலையங்களை இடித்தும் பல மாதங்களாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றைத் துரிதமாகச் செய்து முடிக்க வேண்டும்.

திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் மக்களவைத் தேர்தலைப் போலவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம்''.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in