

ஆயுத பூஜைக்காகப் பூக்கள் வாங்க தோவாளை மலர்ச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் இன்று கூடியதால் சந்தை களைகட்டியது. ஊரடங்கிற்குப் பின்னர் முதன்முறையாக பூக்கள் விலை பன்மடங்கு உயர்ந்து.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர்ச் சந்தையில், பண்டிகை நாட்கள் மற்றும் முகூர்த்த தினத்திற்கு முந்தைய நாட்களில் பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆகும். பூக்களை வாங்கப் பொதுமக்கள் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் குவிவர். ஆனால் கடந்த மார்ச் மாதம் கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் தோவாளை மலர்ச் சந்தையை 3 மாதத்திற்கு மேல் திறக்கவில்லை. பின்னர் மலர்ச் சந்தை திறந்து சமூக இடைவெளியுடன் வியாபாரம் நடந்தாலும் பெயரளவிற்கே பூக்கள் விற்றன. இதனால் தினக்கூலிக்குக் கூட வருவாய் கிடைக்காமல் மலர் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது கரோனா ஊரடங்கு தளர்வாலும், கரோனா தொற்று குறைந்து வருவதாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி போன்றவை குமரி மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளாகும். ஆயுத பூஜைக்கான பூக்கள் வாங்க இன்று அதிகாலையிலேயே தோவாளை மலர்ச் சந்தையில் அதிகமான மக்கள் குவிந்தனர். இதனால் கடந்த 6 மாதங்களுக்குப் பின்பு தோவாளை மலர்ச் சந்தை களைகட்டியது. பூக்கள் விற்பனையும் பரபரப்பாக நடந்தது.
சத்தியமங்கலம், மதுரை, திண்டுக்கல், சேலம், உதகை, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து 30 டன்னுக்கு மேல் பூக்கள் தோவாளை மலர்ச் சந்தையில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கு மேற்பட்ட பூக்கள் காலை 8 மணிக்குள் விற்றுத் தீர்ந்தன. இதைப்போல் எப்போதும் இல்லாத அளவில் பூக்களின் விலை 5 மடங்கிற்கு மேல் உயர்ந்தது.
சரஸ்வதி பூஜைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் தாமரைப் பூ வழக்கமாக ஒன்று ரூ.2-க்கு விற்பனை ஆகும். ஆனால், இன்று ஒரு தாமரைப் பூ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை ஆனது. இதைப்போல் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை ஆனது. பிச்சிப்பூ ரூ.800 ரூபாயில் இருந்து ரூ.1,200 வரை விற்கப்பட்டது.
சம்பங்கி ரூ.600, கிரேந்தி ரூ.150, ரோஜா ரூ.320, கோழிக்கொண்டை ரூ.250, வாடாமல்லி ரூ.240, சிவந்தி ரூ.320, கொழுந்து ரூ.200-க்கு விற்பனை ஆனது. மதியத்திற்குப் பின்பு தேவைக்கான பூக்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. 6 மாதத்திற்குப் பின்பு பூக்களை வாங்க அதிக மக்கள் தோவாளை மலர்ச் சந்தையில் கூடியதாலும், பூக்கள் நல்ல விலைக்கு விற்பனை ஆனதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.