Published : 24 Oct 2020 05:53 PM
Last Updated : 24 Oct 2020 05:53 PM

வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’; தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெறத் தகுதியுடையோர் அதற்கென உள்ள இணையதளம் அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:

“வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. ரூ.1,00,000/- (ரூபாய் 1 லட்சம் மட்டும்)-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

2021 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கும் டிசம்பர் 14-ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதல்வரால் ஜனவரி 26, 2021 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x