குலசேகரன்பட்டினம் கோயிலில் அக்.26 நள்ளிரவில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை

குலசேகரன்பட்டினம் கோயிலில் அக்.26 நள்ளிரவில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்.26 (திங்கள்கிழமை) நள்ளிரவு நடைபெறுகிறது.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாகத் தசரா திருவிழா சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்படுவது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான். ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, நடப்பாண்டில் அக்டோர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் இரவு 6 மணிக்கு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தசரா குழுக்களைச் சேர்ந்த இரணடு நபர்கள் மட்டும் கோயிலுக்குச் சென்று காப்புக் கயிறுகளை வாங்கிச் சென்று, தங்கள் ஊரில் உள்ள வேடமணியும் பக்தர்களுக்குக் கிராமக் கோயில்களில் வைத்து வழங்கி காப்பு கட்டினர். தொடர்ந்து பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் அம்மனுக்குக் காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுவினர் தங்களது கிராமங்களில் மட்டும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளி, உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள் பாலித்தார்.

தொடர்ந்து 8-ம் நாளான இன்று இரவு, அம்மன் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். தற்போது கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் நாளான நாளை இரவு, அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வருகிறார்.

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் 10-ம் நாளான நாளை மறுநாள் (அக்.26) நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி இரவு 10 மணிக்கு அம்மனுக்கு மகா அலங்காரப் பூஜையைத் தொடர்ந்து 12 மணிக்கு, கோயில் முன்புறம் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்கிறார்.

அக்டோபர் 27-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், 6 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்புக் களைதல் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோயில்களிலேயே காப்பு களைந்து, வேடங்களைக் கலைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களின் வசதிக்காகக் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் யூடியூப் மற்றும் உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in