

கரோனா காலத்தில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைக் காலி செய்ய மிரட்டல் விடுக்கும் செயற்பொறியாளர் காந்தி மீது எடுத்த நடவடிக்கை குறித்து வீட்டு வசதி வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பீட்டர்ஸ் காலனியில் உள்ள 342 குடியிருப்பில் அரசு அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியிருப்பை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டுவதற்காக பீட்டர்ஸ் காலனியில் குடியிருப்போரை, குடியிருக்கத் தகுதியில்லாத லாயிட்ஸ் காலனி குடியிருப்புக்கு மாற்றக் கட்டாயப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது
இதற்காக வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் காந்தி, பீட்டர் காலனியில் தங்கியிருப்போரைக் காலி செய்யத் தொடர்ந்து மிரட்டுவதோடு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பையும் துண்டித்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார் என்று பீட்டர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் முத்துச்செல்வன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மநில மனித உரிமை ஆணையம், வீட்டு வசதி வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் காந்தி, குடியிருப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு தொடர்ந்து மிரட்டி வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூடுதல் மனு ஒன்றை மனித உரிமை ஆணையத்திற்கு முத்துச்செல்வன் அனுப்பியிருந்தார்.
இதைப் பதிவு செய்த மனித உரிமை ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், செயற்பொறியாளர் காந்தியின் மனித உரிமை மீறல் செயல் குறித்தும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வீட்டு வசதி வாரியம் 3 வாரத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.