Published : 18 Oct 2015 02:55 PM
Last Updated : 18 Oct 2015 02:55 PM

தமிழகத்தில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்தால் மக்கள் பிரச்சினை தீரும்: எ.வ.வேலு உறுதி

தமிழகத்தில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்தால்தான் மக்கள் பிரச்சினை தீரும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், தேவனந்தல் ஆகிய 5 கிராம மக்களிடம் ‘பேசலாம் வாங்க’ என்ற தலைப்பில் மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு நேற்று நடத்தினார்.

தி.மலை அருகே வேங்கிக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் பேசும்போது, “சாலை வசதி இல்லை, தெரு மின் விளக்குகள் கிடையாது, வாய்க்கால் வசதி இல்லை, வாய்க்கால் சுத்தம் செய்வது கிடையாது, சுடுகாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, சுடுகாடு விரிவாக்கம் செய்ய வேண்டும், ஆவின் பால் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க வேண்டும், ரேஷன் கடையில் 50 சதவீத பொருட்கள்தான் வழங்கப்படுகிறது, அதிக எண்ணிக்கையில் அட்டைகள் உள்ள ரேஷன் கடையை பிரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், மாவட்ட பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டபடி, ஒரு சதுர அடிக்கு ரூ.65 வழங்க வேண்டும்’’ என்றனர்.

சாதுக்கள் பேசும்போது, “சாதுக்கள் யார், பிச்சைக்காரர்கள் யார், ஜோதிடம் பார்ப்பவர்கள் யார் என்று வித்தியாசம் தெரியாமல் போலீஸார் செயல்படுகின்றனர். பவுர்ணமி நாட்களில் அனைவரையும் கைது செய்து ஒர் இடத்தில் அடைத்து வைக்கின்றனர். சாதுக்களுக்கு போலீஸாரால் பிரச்சினை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். மேலும், அடையாள அட்டை, மருத்துவ வசதி, தங்கும் இடம் மற்றும் 60 வயதை கடந்தவர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும்” என்றனர்.

பின்னர் எ.வ.வேலு பேசும் போது, “தி.மலை மாவட்ட விவசாயி களுக்கு வறட்சி நிவாரணம் வழங் கப்படும் என்ற முதல்வர், தனது வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் 1,26,936 குடிசை வீடுகளை, சிமென்ட் தளம் போட்ட வீடுகளாக மாற்றித் தரப்படும். துவரம் பருப்பு விலையை கேட்கும்போது தலையில் இடி விழுவதுபோல் உள்ளது. கருணாநிதி ஆட்சியில் ரேஷன் கடையில் துவரம் பருப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது ஏழைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் மக்கள் பிரச்சினை தீரும்” என்றார். பின்னர் மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x